அருண் ஜெட்லி - ஜெயலலிதா சந்திப்பு, தயாநிதி மாறன் மீதான சிபிஐ யின் தொலைத்தொடர்பு இணைப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு தமிழக அரசியல் பரபரப்புகளுக்கிடையே களைக்கட்டத் தொடங்கிவிட்டது திருவரங்கம் தேர்தல்.
தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில், முன் எப்போதும் இல்லாத நிகழ்வாக, இந்தியத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் அத்தனையும் தங்கள் செய்திகளில் திருவரங்கம் இடைத்தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன, காரணம் ஜெயலலிதா.
இந்த இடைத்தேர்தல் வந்ததற்கானக் காரணம், எல்லோரும் அறிந்த சேதிதான். அதே போல், வெற்றியை எந்தக்கட்சி பெறப்போகிறது என்பதும் தமிழகம் அறிந்த ரகசியம்தான்.
ஆனாலும், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில், தை மாதத் தரைப் பனியையும் மீறி, அரசியல் அனல் நாளுக்கு நாள் அக்னி நட்சத்திரம் போல் எகிறிக் கொண்டேப் போகிறது.
ஆளும் கட்சியான அ.தி.மு.க, எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறாத தி.மு.க, தமிழகத்தின் தவழும் கட்சியான பா.ஜ.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு பிரதான கட்சிகளுக்குள்தான் போட்டி என்றாலும், உண்மையான ‘நீயா...நானா?’ போட்டியும் போட்டுப் பார்த்து விடுவோம் என ஆள் பலம், படைபலம்,மிக முக்கியமாக பணபலம் ஆகியவற்றோடு களத்தில் இறங்கியிருப்பது இரண்டு கழகங்கள் மட்டும்தான்.
அதிலும் அ.தி.மு.க தரப்பு, தி.மு.க வேட்பாளரை டெபாஸிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று வெறியோடு வேலைச்செய்கிறது. இதற்காகவே, 27 அமைச்சர்கள் உள்ளிட்ட 50 பேர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்தார் அம்மையார்.
மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலாவது அ.தி.மு.கவை வீழ்த்தி, அம்மையாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தே ஆகவேண்டும் என்று வெறிகொண்டு, களத்தில் புயலாய் புகுந்துப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க தரப்பு. இதற்காகவே, இடைத்தேர்தல் கள அனுபவம் கொண்ட, 63 பேர்கள் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அறிவித்து பதிலடிக் கொடுத்தார் கலைஞர்.
ஆண்களும், பெண்களும் திருநங்கைகளுமாக மொத்தம் 2,70,129 வாக்காளர்களை மட்டுமே கொண்ட இந்தக் குட்டி சட்டமன்றத்தொகுதியில், பெரும்பான்மை சமூகத்தவராக (40%) முத்தரையர் பிரிவினர் இருக்கிறார்கள். இதை கணக்கில் கொண்டே, இரண்டு கழகங்களும் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே (பா.வளர்மதி, ஆனந்த்) தங்கள் வேட்பாளராகக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றன. இதில், தி.மு.க வேட்பாளரான ஆனந்த் கடந்த 2011 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவை எதித்துப் போட்டியிட்டு தோல்வியுற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மை சமூகத்தவராக முத்தரையர் இருந்தாலும், மீதமுள்ள அறுபது சதவீதத்தை முறையே, தாழ்த்தப்பட்டவர்களும் (30%), பிராமணர்களும் (15%), இதர சமூகத்தினர்(15%) ஆகியோர் கொண்டிருப்பதால், இவர்களில் பெரும்பான்மை யானவர்கள் யார் பக்கம் சாய்கிறார்களோ, அவர்களுக்கு வெற்றி நிச்சயம். இதனை கவனத்தில் கொண்டே அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இவர்களைக் குறிவைத்து தங்களது பண பலத்தைக் கட்டவிழ்த்து விடத் தயாராகிவிட்டன.
தொகுதியைச் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களிலும் உள்ள மக்களிடையே, கழகங்கள் ஓட்டுக்கு நிர்ணயித்துள்ள தொகையைக் குறித்த பேச்சு வெளிப்படையாகவே இருக்கிறது. இந்தமுறை இரண்டு கழகங்களிடமிருந்தும் பணத்தை ஒரு பைசா குறைவில்லாமல் பெற்றுவிட வேண்டும் என்பதில் கறாராகவே இருக்கிறார்கள், திருவரங்கம் தொகுதி வாக்காளர்கள்.
இதற்கு காரணம், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்களுக்குத் தந்து விட்டதாக சொல்லிவிட்டு, கழகங்கள் தந்த பணத்தை அந்தந்தக் கட்சி பண பட்டுவாடா பொறுப்பாளர்களே அபேஸ் பண்ணிவிட்டு, தங்களை ஏமாற்றி விட்டார்கள், என்று நாம் சந்தித்த பெரும்பான்மையான வாக்காளர்கள் கூறுகின்றனர்.
‘ வாக்குக்கு பணம் கொடுப்பதும், பெறுவதும் சட்டபடி குற்றம்’ என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதே அந்த பயம் இல்லையா உங்களுக்கு என்று கேட்டால், ‘புகை பிடிப்பதும், மது அருந்துவதும் கூட தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடுன்னு அரசாங்கமே சொல்லுது, ஆனால், எவன் தம் அடிக்கலே, தண்ணி குடிக்கலே, போங்கப்பு உங்க வேலையை பார்த்துட்டு’ என்று தங்கள் தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்கள் அந்த வாக்காளர்கள்.
வாக்காளர்களின் இந்த அதிகப்படியான விழிப்புணர்வையும், கறார்தனத்தையும் கண்டுதான் கடுப்பாகிக் கிடக்கிறார்கள், இரண்டு கழகங்களையும் சேர்ந்த பண பட்டுவாடா வார்டு பொறுப்பாளர்கள்.
எது எப்படியோ, அதிமு.க, தி.மு.க இடையே நடக்கும் கடும் போட்டியில், திருவரங்கம் தொகுதி வாக்காளர்கள் காட்டில் பண மழைதான் போங்கள்!
கடந்த 1967-ம் ஆண்டு முதல் நடந்த 11 சட்டமன்றத் தேர்தல்களில், திருவரங்கம் தொகுதியில் 7 முறை அ.தி,மு.க.வும், 3 முறை காங்கிரஸும், ஒரு முறை தி.மு.கவும் வெற்றி பெற்றுள்ளன.
·இந்து மக்கள் கட்சி, கள் இயக்கம், ரஜினி மன்றம், ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலரான சென்னையைச் சேர்ந்த டிராபிக் ராமசாமியும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
·வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்த வழக்கு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாலும், ஜாமீன் பெற்றுக்கொண்டு சிறையிலிருந்து வந்திருப்பதாலும் தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவால் வரமுடியாத சூழல் நிலவுகிறது. ஆனாலும், அவர் தேர்தல் பிரச்சார பேச்சு, பெரிய எல்.ஈ.டி. திரை மூலம் தொகுதி முழுக்க வாகனம் மூலம் வலம் வருகிறது.
·தி.மு.க சார்பாக திருவரங்கம் தொகுதியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடையில் தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை செய்கிறார் கலைஞர்.
இந்த தேர்தலின் வெற்றி தோல்வியை விட வாக்கு வித்தியாசத்தின் மூலம் ஜெயலலிதா ஆதரவு அலை இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக!
பிப்ரவரி, 2015.